Skip to main content

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதலாவது சர்வதேச தமிழ் மாநாடு

icact2024-ba.jpg

கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில் முதலாவது சர்வதேச தமிழ் மாநாடு கடந்த 13.06.2024 அன்று 'தமிழரின் கலையும் கலாசாரமும்' என்ற தொனிப்பொருளில் மிக விமர்சையாக நடைபெற்றது. கிழக்குப் பல்கலைக்கழகமானது வவுனியா பல்கலைக்கழகம், தமிழக பல்கலைக்கழகங்களான பாண்டிச்சேரி பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி ஆகியவற்றோடு இணைந்து இந்த மாநாட்டை வெற்றிகரமாக நிகழ்த்தியிருந்தது. கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்க் கற்கைகள் துறையானது கலை கலாசார பீடத்தின் ஒத்துழைப்போடு மாநாட்டிற்கான ஒழுங்கமைப்பினை சிறப்புற மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டிற்கு இந்தியா, அவுஸ்திரேலியா, கனடா, இலண்டன், மொறிசியஸ்; முதலான பல நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேலான ஆய்வாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், புலமையாளர்கள் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும். 


இம்மாநாட்டில் இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சந்தன பி. உடவத்த பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார். சிறப்பு அதிதியாக தமிழ்நாட்டு வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியின் வேந்தர் முனைவர் பு. விஸ்வநாதன் அவர்களும் இலங்கைக்கான யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் முன்னாள் தூதர் கௌரவ ஸ்ரீ எ. நடராஜன் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்;. அண்ணா பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர், முனைவர் சு. வேல்ராஜ் அவர்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களும் ஆதார சுருதி உரையினை ஆற்றினர். இந்த மாநாட்டிற்கு கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் அவர்களும் வவுனியா பல்கலைக்கழக உபவேந்தர் த. மங்களேஸ்வரன் அவர்களும் தலைமைதாங்கினர். பேராசிரியர் பாஞ்.ராமலிங்கம், கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட பீடாதிபதி வ.குணபாலசிங்கம் ஆகியோர் மாநாட்டு கூட்டுநர்களாகவும் பேராசிரியர் சி. சந்திரசேகரம் அணைப்பாளராகவும் செயற்பட்டனர்.


அதிதிகளை பாரம்பரிய இசை, நடன நிகழ்வோடு வரவேற்றல், திருவள்ளுவரின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தல், மங்கல விளக்கேற்றல் ஆகிய சம்பிரதாய நிகழ்வுகளோடு ஆரம்பித்த தொடக்க விழாவின் ஆரம்பத்தில் பாரம்பரிய கூத்து மரபைப் பின்பற்றி நிகழ்த்துகை செய்யப்பட்ட வரவேற்பு நடனம் பார்வையாளர்களுக்கு மட்டக்களப்புப் பாரம்பரியக் கலையின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. தொடர்ந்து அதிதிகளின் உரைகளும் ஆதார சுருதியுரைகளும் இடம்பெற்றன.மாநாட்டு ஆய்வுக் கட்டுரைத் தொகுப்பு வெளியீடு என்பவற்றோடு கிழக்குப் பல்கலைக்கழக தமிழ் கற்கைகள் துறையினால் சேகரிக்கப்பட்டு கணினிமயப்படுத்தப்பட்ட ஏட்டுப் பிரதிகள் பற்றிய ஆவண காணொளித் தொகுப்பும் கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக சித்த மருத்துவ பீடத்தினால் கங்குவேலி அகஸ்தியர் தாபனத்தை மையப்படுத்தித் தயாரிக்கப்பட்ட சித்த வைத்தியம் தொடர்பான ஆவண இறுவட்டும் வெளியிடப்பட்டமை சிறப்பம்சம்சங்களாகும். 


தொடக்க விழாவை அடுத்து 12.30 மணிக்கு 'நவீன யுகத்தில் தமிழ்ப் பாரம்பரிய முறைகளின் பிரயோகம்' எனும் கருப்பொருளில் சிறப்பு நிகழ்வாக குழுசார் உரையாடல் அரங்கு ஒன்றும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறை மற்றும் கட்டடத் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியை முனைவர் க. திலகவதி 'தமிழர் மரபில் தொழில்கள்' என்ற தலைப்பிலும், கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் அவுஸ்திரேலிய விக்ரோரியாப் பல்கலைக்கழக விரிவுரையாளருமான இயற்கை வைத்தியர் நித்தி கனகரட்ணம் 'தமிழர் உணவுகளும் எதிர்கால மக்களின் மூளைத்திறனும் - அரிசி மாப்பண்டங்களை முன்வைத்து ஒரு நோக்கு', என்ற தலைப்பிலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் அலகின் நிகழ்ச்சித் திட்டத் தலைவரும், சந்தைப்படுத்தல் துறையின் பேராசிரியருமான சி. சிவேசன் 'சமகாலத்தில் காணப்படுகின்ற வணிக நடைமுறைகளில் சங்ககால வணிக நடைமுறைகளின் பிரதிபலிப்பு' என்ற தலைப்பிலும் இந்த அரங்கில் காத்திரமான ஆய்வு உரைகளை நிகழ்த்தினர். 


மாநாட்டின் மற்றுமொரு பிரதான நிகழ்வாக ஆய்வரங்கு நடத்தப்பட்டது. ஆய்வரங்கிலே தமிழர்களின் வரலாற்றுப் பாரம்பரியங்கள், மொழியும் இலக்கியமும், பாரம்பரிய தொடர்பாடல் முறைகள், பாரம்பரிய கல்வி முறைகள், பாரம்பரிய தொழில் முறைகளும் சமூகமும், கலைகளும் கைவினைப் பொருட்களும், பாரம்பரிய உடைகள், விளையாட்டுக்கள் மற்றும் உணவு வழக்காறுகள், விழாக்களும் சடங்குகளும், தமிழர்களின் கலை மற்றும் கலாசார மரபுகளில் உலகமயமாக்கத்தின் தாக்கம் ஆகிய கருப்பொருள்களின் கீழ் 87 கட்டுரைகள் 17 அரங்குகளில் வாசிக்கப்பட்டன. இந்த ஆய்வரங்க நிகழ்வில் விரிவுரையாளர்கள், தமிழ் ஆர்வலர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 


மாநாட்டின் இறுதி நிகழ்வாக அன்றிரவு இலங்கைத் தமிழர்களின் கலை பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தும் வகையிலான கலை நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்வுகளை சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் பொறுப்பேற்று நிகழ்த்தியது. வெளிநாட்டிலே இருந்து வரும் தமிழ் ஆர்வலர்களுக்கு இந்தக் கலை நிகழ்த்துகைகள் புதுமையாகவும் பிரமிப்பூட்டுவனவாகவும் அமைந்தன. வசேடமாக இலங்கைத் தமிழர்களின் நாட்டுக் கூத்துக் கலை வேறுபட்ட வகைகளிலும் புதுமையாகவும் நிகழ்த்துகை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


இந்த மாநாடு தமிழ் ஆர்வலர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழ் கலை பண்பாடு சார்ந்த விழிப்புணர்வை ஊட்டும் வகையில் அமைந்தது எனலாம். 


website url: https://www.fac.esn.ac.lk/ic2024

 IMG-20240616-WA0196 (1).jpg
 IMG-20240616-WA0293 (1).jpg
 IMG-20240616-WA0312 (1).jpg
 IMG-20240616-WA0313 (1).jpg
 IMG-20240616-WA0315 (1).jpg
 IMG-20240616-WA0326 (1).jpg
 IMG-20240616-WA0381 (1).jpg
 IMG-20240616-WA0405 (1).jpg
 IMG-20240616-WA0409 (1).jpg
 IMG-20240616-WA0421 (1).jpg
 IMG-20240616-WA0446 (1).jpg
 IMG-20240701-WA0027.jpg
 IMG-20240701-WA0028.jpg
 IMG-20240701-WA0029.jpg
 IMG-20240701-WA0030.jpg
 IMG-20240701-WA0031.jpg
 IMG-20240701-WA0032.jpg
 IMG-20240701-WA0033.jpg
 IMG-20240701-WA0040.jpg
 IMG-20240701-WA0042.jpg

Taxonomy

About us

The Eastern University, Sri Lanka, was established on the 01st of October 1986 by a University Order dated 26th September 1986 issued under Section 2 of the Universities Act No: 16 of 1978.

Contact Us

Reception

Eastern University, Sri Lanka Vantharumoolai,
Chenkalady
Tel: +94 65-2240490,2240590
Fax: +94 65-2240730
E-mail: receptions@esn.ac.lk